Tamil Nadu Elections: Alliances, Their Claims and Voter Mood
தமிழ்நாடு தேர்தல்: கூட்டணிகளும் அவற்றின் கூற்றுகளும் வாக்காளர்களின் மனநிலையும்
–கவின் மலர்–
தமிழ்நாட்டில் 23 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தல் மிக முக்கியமான தேர்தல். தமிழ்நாட்டிற்கென்று ஒரு வரலாறு உண்டு. அது பல்லாண்டு காலமாக திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) என மாறி மாறி ஆட்சிக்கு வந்ததுண்டு. ஒரேயொரு முறை அஇஅதிமுக தொடர்ச்சியாக பத்தாண்டு காலம் ஆண்டது.
இன்று ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தொடரவேண்டுமா இல்லையா என்பதே இத்தேர்தலின் முக்கியமான கேள்வி. ஒன்றிய அரசு எப்போதெல்லாம் தமிழ்நாட்டை ஒடுக்க நினைக்கிறதோ, அது இந்தித் திணிப்பாக, நீட் தேர்வாக, சமஸ்கிருதத்தை பாடத்திட்டத்தில் சேர்க்கச் சொல்வதாக இப்படி எதுவாக இருந்தாலும் அதை மிகக் கடுமையாக எதிர்த்தே வந்திருக்கிறது என்பதே தமிழ்நாட்டின் தனித்தன்மை. குறிப்பாக திமுக எப்பொழுதும் மாநில சுயாட்சிக்காகவும் மாநில உரிமைகளுக்காகவும் போராடும் கட்சியாக இருக்கிறது.

ஒன்றிய அரசு நிறுவனங்களை கருவிகளாக்கி தன்வசப்படுத்துதல்
அதிமுக ஆண்ட பத்தாண்டுகளில் பாஜக மிகத் தந்திரமாக அதிமுகவை அமலாக்கத் துறையை வைத்து, சி.பி.ஐ யை வைத்து தன்வயப்படுத்தியது. அதன் பிறகு சில காலம் பிரிந்து பின் மீண்டும் தேர்தலில் கூட்டணி வைத்தன பாஜகவும் அதிமுகவும். இந்தக் கூட்டணியில் டி.டி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக), பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் பிரிவு ஆகியவையும் உள்ளன.
இந்தக் கூட்டணிக்கு நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை வரவைத்துவிட பெரிதும் முயன்றது பாஜக. அவர் நடித்த ஜனநாயகன் திரைப்படத்திற்கு சான்றிதழ் தராமல் இழுத்தடித்தது. அது போலவே திமுகவின் இந்தி எதிர்ப்பு வரலாறைச் சொல்லும் ‘பராசக்தி’ திரைப்படத்திற்கும் சான்றிதழ் தராமல் அலைக்கழித்தபின்னரே தரப்பட்டது. ஜனநாயகனுக்கு இன்று வரை சான்றிதழ் கிடைக்கவில்லை.
ஆரம்பத்தில் தன் கொள்கை எதிரி என பாஜகவை அறிவித்தார் விஜய். ஆனால் ஜனநாயகன் சான்றிதழ் விஷயத்தில் கூட பாஜகவை அவர் விமர்சிக்கவில்லை. கரூரில் விஜய் பரப்புரையின் போது 41 பேர் உயிரழந்ததை அடுத்து சிபிஐ விசாரணைக்கு இரண்டு முறை டெல்லி சென்றார் விஜய். முதல் மாநாடான விக்கிரவாண்டி தொடங்கி தற்போது வரை 51 உயிர்கள் இதுவரை விஜய் பரப்புரைகளில் பலியாகின. பாஜகவினர் பலர் த.வெ.கவின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றனர். அதிலும் பாஜகவில் பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர் எல்லாம் த.வெ.க.வின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றது அதிர்ச்சியளித்தது.
’ஜனநாயகன்’ திரைப்படம் மத்திய தணிக்கை வாரியத்தால் சான்றிதழ் தராமல் முடக்கப்பட காரணமான பாஜகவை விஜய் ஒருபோதும் விமர்சிக்கவில்லை மாறாக இரண்டாம் கட்ட தலைவர்களை வைத்து இதற்கு காரணம் திமுகவே என்று பேச வைத்தார். அடுத்து ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்தது இதற்கு காரணமும் திமுகவே என்று த.வெ.க தரப்பு குற்றம்சாட்டியது. விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கும் திமுகவையே குற்றம் சாட்டியது த.வெ.க.
சினிமா மோகமும் மக்கள் நலத் திட்டங்களும் அறிவுத்தளமும்
இந்தத் தேர்தலின் பரப்புரை தமிழ்நாட்டின் இளைஞர்கள், படித்தவர்களில் சிலர் சினிமா மோகத்தில் மூழ்கியுள்ளதைக் காட்டியது. அதற்கு சாட்சி விஜய்க்கு கூடும் கூட்டம். இதற்கு நேர்மாறாக ஆளும் திமுகவின் மக்கள் நலத் திட்டங்களால் பயனடைந்தவர்கள் முழுமையாக திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என விரும்புகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்தத்தில் இருந்து கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்திருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களை நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பும் மாதிரிப் பள்ளிகள், ’நான் முதல்வன்’ திட்டம், அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு உயர்கல்வியின்போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘புதுமைப் பெண்’, மாணவர்களுக்கு ‘தவப்புதல்வன்’ திட்டங்கள், மாணவர்களுக்கு லேப்டாப் திட்டம், பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆகியவை புகழ்பெற்ற திட்டங்கள்.
பெண்களுக்கு மாதாமாதம் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய், பெண்களுக்கென விடியல் இலவசப் பேருந்துப் பயணம் ஆகியவை மகளிருக்கான மிக மிக முக்கியமான திட்டங்கள்.
தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் உள்கட்டமைப்பு வசதிகள் இந்த ஐந்து ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. மேம்பாலங்கள், சாலைகள் என்று தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையில் கட்டப்பட்டது நூலகங்களுக்கு நூல் கொள்முதல் செய்வதற்கான புதிய கொள்கை உருவாக்கப்பட்டது. அரசு நடத்தும் இலக்கிய திருவிழாக்களும் புத்தகக் கண்காட்சிகளும் மிகப் பரவலான கவனத்தைப் பெற்றன. தமிழ் நாட்டு மக்களை வாசிப்புப் பழக்கம் உடையவர்களாக மாற்றும் பல்வேறு திட்டங்கள் திமுக அரசால் செயல்படுத்தப்பட்டன.
தேர்தலில் சாதி – மதத்தின் பங்கு
அனைத்து இஸ்லாமியக் கட்சிகளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. கிறித்தவர்களின் வாக்குகள் இந்த முறை விஜய்க்குப் போகக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்த சமயத்தில் திருச்சபைகளில் இருந்து திமுக கூட்டணியை ஆதரித்து அறிக்கைகள் வந்தன. ஆனாலும் கிறித்தவர் என்பதற்காக விஜய்க்கு கிறித்தவர்களில் ஒரு பகுதியினர் ஆதரிக்கக் கூடும். ஆனால் அவ்வாக்குகள் சொற்பானவையாகவே இருக்கக்கூடும்.
தமிழ்நாட்டு மக்கள் எப்பொழுதும் பாஜகவிற்கு எதிர்நிலை எடுப்பது வழக்கம். இந்த முறை பாஜகவும் அதிமுகவும் கைகோர்த்து இருப்பதால் அதிமுகவிற்கு வழக்கமாகக் கிடைக்கும் வாக்குகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு. வடதமிழ்நாட்டு வன்னியர்களின் ஒரு பகுதி வாக்குகள் அன்புமணி ராமதாஸ் காரணமாக இக்கூட்டணிக்குக் கிடைக்கும்.
மொத்தத்தில் பாஜக என்கின்ற மதவாத கட்சி, அதற்கு துணை போகும் அதிமுக, சாதிக் கட்சியான பாமக, முக்குலத்தோர் பிரிவை நம்பி இருக்கும் அமமுக ஆகியவை இந்தக் கூட்டணியில் இருப்பதால் இது ஒரு சாதிய மதவாத கூட்டணியாக உள்ளது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர், தமிழ்நாட்டின் சில அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள் இணைந்து ‘ஜீரோ பிஜேபி’ எனும் பரப்புரையை மேற்கொண்டனர். தமிழ்நாட்டு ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவிற்கு வாக்குகள் கிடைக்காவிட்டாலும் நரேந்திர மோடி விடாமல் தமிழ்நாட்டுக்கு பரப்புரைக்கு வருகிறார்.
நாம் தமிழர் கட்சிக்கு முன்பிருந்த தமிழ் தேசிய அடையாளம் மாறிப்போய் பாஜகவின் கொள்கைகளையே தனது கொள்கைகளாகப் பேசுவதால் அவரது அடையாளம் மாறிவிட்டது. முந்தைய தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை இந்த முறை விஜயின் த.வெ.க. பிரிக்கும் என்பது அரசியலை உற்று நோக்குபவர்களின் கருத்தாக இருக்கிறது.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என அனைத்து பரப்புரைக் கூட்டங்களிலும் குழந்தைகள் வருகிறார்கள். ஒரு சில இடங்களில் தலைவர்கள் அவர்களிடம் பேசுவதும் அவர்களைப் பேசவைப்பதும் நடக்கிறது. இவையெல்லாமே தவிர்க்கப்படவேண்டியவை. இறுதி நாள் பரப்புரையின் போது விஜய் பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. தனது ரசிகர்களான குழந்தைகளிடம் அவர் ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார். “உங்கள் அம்மாவிடமும் அப்பாவிடமும் அத்தை மாமா என்று வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எல்லோரிடமும் இந்த விஜய் மாமாவிற்கு வாக்களிக்கும்படி போய் கேளுங்கள். எப்படி ஒரு சாக்லேட் வேண்டும் என்றாலும் கிண்டர் ஜாய் வேண்டும் என்றாலும் அடம்பிடித்து வாங்குவீர்களோ அதுபோல அடம்பிடித்து எனக்கு ஓட்டு போட சொல்லுங்கள்” எனக் கேட்டுக் கொண்டார்.
தேர்தல் ஆணைய விதிகளின்படி குழந்தைகளை தேர்தல் பரப்புரைச் செயல்பாட்டில் ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்று குழந்தைகள் உரிமைகள் செயல்பாட்டாளர் தேவநேயன் அவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்.
பிம்பங்களை உருவாக்கும் ஊடகங்களின் பாரபட்சம்
ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை மூன்று அணியினரும் பிரித்துக் கொள்கிறார்கள் அதிமுக – பாஜக கூட்டணி, தவெக, நாம் தமிழர் ஆகிய மூன்று அணிகளும் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை தங்களுக்குள் பிரித்துக் கொள்கின்றனர். ஆகவே திமுக மிகச் சுலபமாக வெற்றி பெறும் என்பதே பலருடைய கணிப்பாகவும் இருக்கிறது
எப்படி 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மோடியின் பிம்பம் ஊதி பெரிதாக்கப்பட்டதோ அது போலவே விஜயின் பிம்பம் தமிழ்நாட்டு ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்டது. முன் எப்போதும் இல்லாத வகையில் விஜய் தன் வீட்டில் இருந்து கிளம்புவது முதல் அவருடைய சில மணிநேர சாலைப் பயணம் முதற்கொண்டு நேரலை செய்தன ஊடகங்கள். இதனால் ஊடகங்கள் மீது பெரும் விமர்சனமும் எழுந்தது.
சில தமிழ்நாட்டு ஊடகங்கள் இப்படி என்றால் தேசிய ஊடகங்கள் ஆங்கில சேனல்கள் எல்லாம் அதன் பங்கிற்கு பாரபட்சமாக செயல்பட்டன. தமிழ்நாட்டிற்கு இது ஒன்றும் புதிதல்ல. ஜெயலலிதா உயிருடன் இருந்த பொழுது தமிழ்நாடே அவரை ’அம்மா’ என்று அழைத்தது போல ஆங்கில ஊடகங்கள் அவரை ’அம்மா’ என்று விளித்தன. ஆனால் அதிமுக கட்சிக்காரர்கள் மட்டுமே அவரை அம்மா என்று அழைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் தமிழ்நாட்டில் திமுகவை தாண்டி பொதுமக்களை பலரும் கலைஞர் என்று அழைக்கும் மு கருணாநிதியை ’கருணா’ என்று விளிக்கும் பழக்கம் ஆங்கில சேனல்களுக்கு உண்டு. இதற்கு ஆங்கில ஊடகங்களின் பார்ப்பனரல்லாதோர் குறித்த பார்வையே காரணம் என்பர் திமுகவினர்.
மகளிர் உரிமைத் தொகை எனும் சொல்லாடல் மிகுந்த சுயமரியாதை கொண்டது. அது இலவசம் அல்ல. வீடுகளில் கட்டணமின்றி உழைக்கும் பெண்களுக்கான உரிமைத் தொகை எனும் பொருள்படும்படியாக அப்பெயர் வைக்கப்பட்டது ஆனால் ஆங்கில ஊடகங்களில் அப்பெயரை நேரடியாக தமிழில் சொல்லாமல் Cash Transfer என்கிறார்கள். ஆனால் இதே ஊடகங்கள் பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை நாரி சக்தி மசோதா என இந்தியில் சொல்கின்றன. மகளிர் உரிமைத் தொகையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கூட சொல்லலாமே? Cash Transfer என்னும் சொல் எதற்கு? ஓர் ஆங்கில ஊடகத்தில் ”திமுக தனது Cash Transfers பெண்களிடம் வாக்குகள் பெற்றுத் தரும் என நம்புகிறது” என செய்தி சொல்கையில் மகளிர் உரிமைத் தொகை பற்றி அறியாத வட இந்திய நபர் ஒருவர் என்ன நினைப்பார்?
எப்பொழுதும் தென்னிந்தியா, குறிப்பாக தமிழ்நாடு குறித்த செய்திகளில் ஆங்கில ஊடகஙக்ள் ஒருதலைப் பட்சமாகவே செய்திகள் வெளியிடுவதைப் பார்க்கிறோம். அவை பாஜகவுக்கு சாதகமாகவே பெரும்பாலும் இருக்கும். இந்தத் தேர்தலும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
டெல்லி Vs தமிழ்நாடு
முன்னதாக மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தவில்லையெனில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு வரவேண்டிய 2,291 கோடி ரூபாய் சமக்ர சிக்ஷா தொகையை விடுவிக்க முடியாது என இரண்டு ஆண்டுகளாக ஒன்றிய அரசு தெரிவிக்க, மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தமுடியாது, இருமொழிக் கொள்கையே தொடரும் என அறிவித்தது தமிழ்நாடு அரசு. ஆகவே இன்று வரை சமக்ர சிக்ஷா தொகை தமிழ்நாட்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தன் அதிகார எல்லையைத் தாண்டி தமிழ்நாட்டு விவகாரங்களுக்குள் தலையிட்டார். இதை திமுக அரசு உரிய முறையில் சட்டரீதியாக உச்ச நீதிமன்றம் வரை சென்று எதிர்கொண்டு வென்றது.
ஒன்றிய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி யால் திருப்பூர் பின்னாலாடை தொழில் உட்பட பல தொழில்கள் நசிந்துபோயின. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து இரானுக்கு எதிரான மேற்கொண்ட போர் காரணமாக உருவான கேஸ் சிலிண்டர் பிரச்சனையால் மக்கள் அவதிக்குள்ளாகி இருப்பதும், அதன் காரணமாக குடும்பங்கள் மட்டுமல்லாது தொழில்துறையிலும் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு ஒன்றிய அரசு இப்பிரச்சனைக்கான முன்னேற்பாடுகளை செய்யாததே காரணமாக அமைந்தது.
மதநல்லிணக்கத்திற்கு ஆபத்து
தஞ்சாவூருக்கு அருகேயுள்ள மைக்கேல்பட்டி என்கிற ஊரில் கிறித்தவப் பள்ளி ஒன்றில் மதமாற்றம் செய்ய நடந்த முயற்சியால் மனமுடைந்து ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டதாக அப்போது பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை தொடர் பரப்புரை செய்தார். தமிழ்நாடு அரசு அப்படி ஏதும் நடக்கவில்லை என்றது. வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. முடிவில் வந்த தீர்ப்பில் மதமாற்றம் நடைபெறவில்லை என திமுக அரசுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது.
தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற முனைந்தது பாஜக. மலை உச்சியில் உள்ள தர்ஹாவுக்கு அருகில் தான் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தீபத்தை ஏற்றவேண்டும் என பல்லாண்டுகளாக முயலும் இந்துத்துவா அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. நீதிமன்றத் தீர்ப்பு தர்ஹாவுக்கு அருகே தீபம் ஏற்றவேண்டும் என்று சொல்ல, தமிழ்நாடு அரசு மிக உறுதியாக நின்று நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றாமல் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றியது. சட்டத்தை மீறி மத நல்லிணக்கம் காத்தது திமுக அரசு. எவரும் எதிர்ப்பார்க்காத நடவடிக்கை இது. ஆட்சிக்கு வந்தவுடன் பார்ப்பனர்கள் மட்டுமே செய்து வந்த அர்ச்சகர்கள் தொழிலை அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றாக்கியது திமுக அரசு.
தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. அதை மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவோடு இணைத்து தந்திரமாகக் கொண்டு வந்தது. ஆனால் ஸ்டாலின் அதைப் புரிந்துகொண்டு உடனடியாக எதிர்வினை புரிந்தார். மசோதாவின் நகலை எரித்தார். அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ஒன்றிய அரசை கடுமையாக எச்சரித்தார்.
தேர்தல் பரப்புரையில் இருந்தாலும் தமிழ்நாட்டு எம்பிக்கள் நாடாளுமன்றத்திறுச் சென்று தங்கள் வாக்குகளை செலுத்தினார்கள். மசோதா தோற்கடிக்கப்பட்டவுடன் எதிர்ப்பார்த்தது போல மகளிர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக கூட்டணி செயல்பட்டதாக பாஜகவும் அதிமுகவும் பரப்புரை செய்தன. ஆனால் அது மக்களிடம் எடுபடவில்லை. ஸ்டாலின் இந்தத் தேர்தலை டெல்லி Vs தமிழ்நாடு என்றார். அது உண்மையும்கூட.
Related

Commentaries